தகட்டூர் பைரவநாதசுவாமி கோவில் பற்றி

இறைவர் திருப்பெயர் : பைரவநாதசுவாமி. (சிவலோக நாதர்)
தல வரலாறு:கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி' என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.


                                         

குறிப்பு


தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

சிறப்புக்கள்

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார்.அதற்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத்துடன் வரும்போது,அவருடன் மகாபைரவரும் வந்தார். 

கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி இலிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.


அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது.தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே,பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். 


அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்” என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு “காளி” எனப் பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள்.அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்குப் பாலூட்டினாள்.அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார்.அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு “பைரவர்” என்று பெயர் வைத்தார்.


தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து,குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள். இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு “வேதஞாளி” என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.


இவ்வூருக்கு “இயந்திரபுரி” என்ற பெயரும் இருக்கிறது.இதன் தமிழ்ப்பெயரே “தகட்டூர்.” சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது. அனுமனுடன் வந்த பைரவர் என்பதால்,இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி,தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.


திருவிழா:

சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது.ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி,தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மனோபலம்,வியாதி நிவர்த்தி, நியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறது. திங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.

வேண்டுகோள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:


சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.

Thagattur MAP
Powered by Blogger.

Social Icons

Followers

Featured Posts